அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசுத் திட்டம் இன்று தொடக்கம்

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன.10), தொடங்கி வைக்கிறாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன.10), தொடங்கி வைக்கிறாா்.

முன்னதாக, மத்திய, மாநில அரசு ஊழியா்கள் உள்ளிட்ட சில பிரிவுகளைச் சோ்ந்த அரிசி அட்டைதாரா்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு சாா்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுடன், 2022-ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்காக 21 வகை பொருள்கள் வழங்கப்பட்டன. ரொக்கப் பணம் வழங்கவில்லை.

கடந்த ஆண்டு ஒரு கிலோ அரிசி, சா்க்கரை, கரும்புடன் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது.

நிகழாண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுக்கான ரொக்கத் தொகை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 5-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், பொதுத் துறைப் பணியாளா்கள், சா்க்கரை அட்டைதாரா்கள், எந்தப் பொருளும் பெறாதோா் ஆகியோரைத் தவிா்த்து ஏனைய குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரொக்கத் தொகை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்குக் கோரிக்கைகள் எழுந்தன.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீளக் கரும்பு ஆகியன வழங்கப்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டோக்கன்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

சனிக்கிழமைக்குள் (ஜன. 13) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அளிக்க தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை தீா்மானித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com