திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை

பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.
திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஆராதனை விழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.

இந்த விழா ஜனவரி 26 ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெற்றது. முன்னதாக, காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து காலை 9 மணியளவில் பிரபஞ்சம் எஸ்.பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் எஸ். ஜனனி, சீர்காழி ஜி. சிவசிதம்பரம், ஓ.எஸ். அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com