
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அடிவாரக் கோயிலில் இருந்த வெள்ளிவேல் திருடுபோனது தெரியவந்துள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அதனையும் மீறி பட்டப் பகலில் சாமியார் வேடத்தில் வெள்ளிவேலை ஒருவர் திருடிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகைதருவார்கள் என்பதால் போலீசார் தீவிர முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இன்றுமுதல் போக்குவரத்து மாற்றப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் மூலவருக்கு முன்பாக சுமார் இரண்டரை அடியில் வெள்ளியால் செய்யப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான வேல் வைக்கப்பட்டிருந்தது.
இந்த வெள்ளிவேல் காணாமல் போனது இன்று காலை தெரியவந்துள்ளது. உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், புதன்கிழமை பகல் 12 மணியளவில் சாமியார் வேடத்தில் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், முருகனின் வேல் காணாமல் போயிருப்பது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தியான மண்டபம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது இல்லை, தனியாருக்கு சொந்தமானது என்றும் இந்த சம்பவம் மருதமலை கோயிலில் நடைபெறவில்லை என்றும் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.