அவர் அளித்த பதிலில், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை தங்களின் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவு பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ஆம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப்பழம் - முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது. இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பணங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது.