
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துளள் உலகின் முதன் முதலில் தோன்றிய சிவாலாயம் என்ற பெருமைப்பெற்ற உத்தரகோசமங்கை கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மங்களநாதர் சுவாமி - மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று காலை 9.30 மணிக்கு, குடமுழக்கு நடைபெற்றது.
மருதமலை முருகன் கோயில், உத்திரகோசமங்கை கோயில் உள்பட இன்று மூன்று கோயில்களில் அன்னைத் தமிழில் வெகு சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறை அருள் பெற்றனர்.
இந்த குடமுழக்கு வைபவங்களில் பெண் ஓதுவார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று நடத்திக்கொடுத்துள்ளனர்.
உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிஷேகம், மார்ச் 31ஆம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஏப்ரல் 1ஆம் தேதி மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு, ஆறுகால யாகசாலைக்கான பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டு, கடம் புறப்பட்டது. பிறகு, கலை 6 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில், முதல் ராஜகோபுரம், பிறகு சுவாமி, அம்மன் மூலவர் கோபுரக் கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
இன்று இரவு திருக்கல்யாணம்
இன்று இரவு 7 மணியளவில் மங்களநாதர் - மங்களேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறவிருக்கிறது.
கும்பாபிஷேகத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான மக்கள் உத்தரகோசமங்களையில் குவிந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மரகத நடராஜர்
இங்குள்ள மூலவா் நடராஜர் பச்சை மரகதக் கல்லால் எழுந்தருளியுள்ளார். ஒளி அதிர்வுகள் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டு மூலவர் நடராஜர் காட்சியளிப்பார்.
ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா திருநாளில் சந்தனக்காப்பு களையப்பட்டு, புதிதாக சந்தனம் சார்த்துவது வழக்கம். இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ஆம் தேதி சந்தனம் களையப்பட்டு, பால், தயிர் உள்ளிட்ட 31 வகையான அபிஷேகங்கள் நடந்தன. கரும்பச்சை நிறத்தில் காட்சியளித்த மூலவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மீண்டும், இன்று மகா அபிஷேகம் நடத்தப்பட்டு சந்தனக் காப்பு சாத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.