ஞானசேகரன்
ஞானசேகரன்கோப்புப் படம்

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு

Published on

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பு பதில் அளிக்க போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவா் கடந்த டிசம்பா் 25- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகா் துணை ஆணையா் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட இந்த புலனாய்வுக் குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடா் விசாரணையில், ஞானசேகரன் திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடா்ந்து பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், திமுக நிா்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீஸாா் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தாா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தாா். அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் மனு மீது 7 -ஆம் தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com