
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே என்று கட்சியின் பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலட்சிய எண்ணத்தை, 11 மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அதற்கு 447.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்வடிவம் கொடுத்தது எனது தலைமையிலான அதிமுக அரசு.
ஆனால், அஇஅதிமுக ஆட்சியின் திட்டம் என்பதாலேயே, ஏறத்தாழ 4 ஆண்டுகள் வேண்டுமென்றே ஆமை வேகத்தில் செயல்பட்டு, இன்று ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் மு.க.ஸ்டாலின்.
அஇஅதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே; இருப்பினும், திமுக-வின் அரசியலுக்காக நீலகிரி மக்களை இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்திருக்க வேண்டாம்.
நாம் நடத்திய "தமிழ்நாடு மாடல்" ஆட்சியின் பெருமைமிகு சின்னங்களாக 11 மருத்துவக் கல்லூரிகளும் காலங்கள் கடந்து திகழட்டும்! நம்மைப் போன்றே அயராது மக்கள் சேவை ஆற்றட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.