என் அன்புத் தமிழ்ச் சொந்தங்களே: ராமேசுவரத்தில் பிரதமர் உரை!

என் அன்புத் தமிழ்ச் சொந்தங்களே: ராமேசுவரத்தில் பிரதமர் உரை!
dot com
Published on
Updated on
2 min read

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

உரையில் அவர் கூறுவதாவது,

என் அன்பு தமிழ் சங்கங்களே! இன்று புனிதமான ராமநவமி நாள். அனைவருக்கும் எனது இதயபூர்வமான ராமநவமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் சங்ககால இலக்கியங்களிலும் ராமர் குறித்து கூறப்பட்டிருக்கிறது.

ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டபோது, ஆசிகள் நிரம்பப்பெற்றவனாய் உணர்ந்தேன். இந்த நன்னாளில் ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள், தமிழ்நாட்டின் இணைப்புத் திறனை வலுப்படுத்தும்.

இது, பாரத ரத்னா டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பூமி. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்று அவரது வாழ்க்கை நமக்கு காட்டுகிறது. அதேபோல, ராமேசுவரத்தின் இந்த புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பத்தையும் பாரம்பரித்தையும் ஒன்று சேர்க்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரு பழைமையான நகரமானது, 21-ஆம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது. பொறியாளர்களின் தீவிரமான உழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்தப் பாலம்தான், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இதற்கடியிலே பெரிய கப்பல்களாலும் பயணத்தை மேற்கொள்ள முடியும்; ரயில்களும் இதன்மீது விரைவாகப் பயணிக்க முடியும். சற்றுநேரத்துக்கு முன்னதாகத்தான், புதிய ரயில் சேவையையும், ஒரு கப்பல் பயணத்தையும் துவக்கி வைத்தேன்.

இந்தப் பாலத்துக்கான தேவை, பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மக்களின் நல்லாசியுடன், இந்தப் பணியை நிறைவு செய்யும் பேறு எங்களுக்கு கிடைத்தது. சுலபமாக வியாபாரம் செய்தல் மற்றும் பயணம் மேற்கொள்வதற்கு ஆதரவாக பாம்பன் பாலம் இருக்கிறது. பல லட்சக்கணக்கான மனிதர்களிடையே, ஆக்கபூர்வமான உதவியை பாம்பன் பாலம் மேற்கொள்ளும்.

ராமேசுவரம் தொடங்கி சென்னை வரையும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பினை, புதிய ரயில் சேவை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு இது பெருமளவிலான ஆதாயத்தினை வழங்கும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சந்தர்ப்பங்களை இது ஏற்படுத்தும்.

கடந்த பத்தாண்டுகளிலே, இந்தியா தனது பொருளாதாரத்தின் அளவினை இரட்டிப்பாக்கியுள்ளது. இத்தகைய விரைவான வளர்ச்சிக்கான பெரிய காரணங்களில், நமது நவீன கட்டமைப்பும் அடங்கும். கடந்த பத்தாண்டுகளில் ரயில், சாலை, விமான நிலையம், துறைமுகங்கள், மின்னாற்றல், நீர், எரிவாயுக் குழாய்கள் போன்ற கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டை ஆறு மடங்கு உயர்த்திருக்கிறோம்.

நாட்டின் மெகா திட்டங்களின் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. வடக்கில் ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றும், மேற்கில் மும்பையில் நாட்டின் மிக நீளமான கடல் பாலமான அடல் பாலமும், அஸ்ஸாமிலும் உள்ளது. தற்போது, உலகின் வெகு குறைவான செங்குத்து உயர்த்தல் பாலங்களில் ஒன்றான பாம்பன் பாலத்தின் பணி நிறைவடைந்திருக்கிறது.

வளர்ச்சியைடந்த பாரதம் நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வல்லமை வளர்ச்சியைப் பொருத்து, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும்.

2014 முன்னர்வரையில் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிகளவில் உதவி புரிந்துள்ளது.

தமிழ்நாட்டின் கட்டமைப்புதான், பாரத அரசின் முதன்மை. கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் செய்தபின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.

2014 ஆண்டுக்கு முன்னர்வரையில், ஒவ்வோர் ஆண்டும் ரயில் துறை திட்டங்களுக்காக வெறும் ரூ. 900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் கூட்டணியில் யார் ஆட்சி அமைத்திருந்தார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தாண்டு, தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம். தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் ராமேசுவரம் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது.

2014-க்கு பிறகு, மத்திய அரசின் உதவியோடு தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவில் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தை இணைக்கவல்ல உயர்த்தப்பட்ட இடைவெளி, அருமையான கட்டமைப்புக்கான மேலும் ஓர் எடுத்துக்காட்டு.

இன்றும்கூட, சுமார் ரூ. 8,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரத்தினுடனான இணைப்பையும் மேம்படுத்தும்.

சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுமக்கள் போக்குவரத்து வசதியும்கூட, சுலபமான பயணம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கட்டமைப்பு தொடர்பான பணிகளுக்கிடையே, இவற்றின் அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதை மறந்துவிடக் கூடாது.

கடந்த பத்தாண்டுகளில் சமூகக் கட்டமைப்பில்கூட இந்தியா சாதனைகாணும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோடிக்கணக்கானோருக்கும் இதன் ஆதாயம் கிடைப்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஏழை,எளிய 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கின்றன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள், ஏழை, எளியோருக்கு கிடைத்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 கோடியே 11 லட்சம் குடும்பங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதனால், நமது தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் ஆதாயமடைந்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com