குமரி அனந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

குமரி அனந்தன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்...
குமரி அனந்தன்
குமரி அனந்தன்
Published on
Updated on
2 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார்.

இவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய குமரி அனந்தன் காலமானார் என்பது செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக, மிகச் சிறப்பாக பணியாற்றியவர். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என முத்திரை பதித்தவர். 1996இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறந்த முறையில் கட்சியை வழி நடத்தினார்.

குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். அவருடைய அரசியல் பயணம், சமூக நலனுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், தமிழ் மக்கள் நலனுக்காக அவர் செலுத்திய பணி, இந்நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு நினைவிற்குரியது. அவரது தூய்மை, நேர்மை மற்றும் தலைமைத் தன்மை இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கியவர். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார். குமரி ஆனந்தனின் மறைவு தமிழ் நாட்டுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

குமரி ஆனந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

”தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தகைசால் தமிழர், இலக்கிய செல்வர் குமரி அனந்தன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் அடியொற்றி அரசியல் பயணத்தைத் தொடங்கிய குமரி அனந்தன் தமிழக அரசியல் களத்தில் தனித்ததோர் இடத்தை பெற்றிருந்தவர்.

நாடறிந்த நலல தமிழ் பேச்சாளர், சீரிய சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், என பன்முக ஆற்றல் மிக்க தலைவராக திகழ்ந்தவர்.

தமிழ் இலக்கியங்களில் தோய்ந்து, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் அவர் உரையாற்றும் சொல்லேர் உழவராக திகழ்ந்ததால் தமிழ் உலகம் அவரை ‘இலக்கியச் செல்வர்’ என்று கொண்டாடி மகிழ்ந்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய அரும் பணிகள் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியாடர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதும் அவரது மகத்தான சாதனைகள் ஆகும்.

முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என வாழ்நாள் எல்லாம் அதற்காக குரல் கொடுத்தவர். மது இல்லா தமிழகம் காணவும், நதிகளை இணைக்கவும் கோரிக்கைகளை முன்வைத்து மூன்று முறை தமிழ்நாட்டில் நடை பயணம் மேற்கொண்டு நடைபயண நாயகர் எனும் சிறப்புக்கு உரியவர் ஆனார்.

குமரி ஆனந்தன், நான் “முழு மதுவிலக்கு எங்கள் இலக்கு” என்று அறிவித்து 2012 டிசம்பர் 12ஆம் தேதி நெல்லை மாவட்டம், உவரி கடற்கரையில் இருந்து நடை பயணத்தை தொடங்கிய போது நெஞ்சார வாழ்த்துக்களை தெரிவித்ததை மறக்க முடியாது.

தன்னேரில்லாத் தமிழ் தொண்டர், மாசு மருவற்றத் தலைவர் குமரி அனந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது மகள் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசை செளந்தரராஜன், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த குமரி அனந்தனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com