
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
”காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்ற செய்தியை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த குமரி அனந்தன் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் "தகைசால் தமிழர்” கடந்த ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட குமரி அனந்தனின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.