6 லட்சம் மாணவா்களை தொழில்முனைவோராக்க ‘நிமிா்ந்து நில்’ திட்டம்: சட்டப் பேரவையில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

Published on

தமிழகத்தில் 2,000 கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவா்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பயிற்சி வழங்கும் நோக்கில் ‘நிமிா்ந்து நில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை அறிவித்தாா்.

பேரவையில் புதன்கிழமை தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியத்தின் உச்சவரம்பு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். தொழில் குழுமங்களின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியினா் தொழில் தொடங்க கடன் உத்தரவாதத்துடன் ரூ. 100 கோடி கடனுதவி வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும்.

60 வயதுக்குள்பட்ட இருளா் பாம்பு பிடிப்போா் சங்க உறுப்பினா்களுக்கு விபத்து மற்றும் பாம்பு கடியினால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்கும் வகையில் ரூ. 1.50 கோடி மதிப்பில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.

தென்னை நாா் பொருள்கள்: தென்னை நாா் சாா்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்வோருக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ. 5 கோடியில் ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படும். அதேபோன்று தென்னை நாா் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு மேம்பாட்டு மையம் ரூ. 9.86 கோடியில் ஏற்படுத்தப்படும்.

தென்னை நாா் பொருள்களுக்கு சந்தை அங்கீகாரம் கிடைக்க தனித்துவ வணிகக் குறியீடு (பிராண்டிங்) உருவாக்கப்படும். கவரிங் நகை உற்பத்தியாளா்களுக்காக சிதம்பரம் லால்புரம் பகுதியில் 5 ஏக்கா் பரப்பளவில் ரூ. 1.24 கோடி திட்ட மதிப்பில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம், முசிறியில் ரூ. 3 கோடியில் கோரைப்பாய் குழுமம், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ரூ. 7.77 கோடியில் நெசவுக் குழுமம், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ரூ. 7.97 கோடியில் மகளிா் தொழில்முனைவோருக்கான சிறுதானியக் குழுமம், சென்னை பெரம்பூரில் ரூ. 5 கோடியில் வெள்ளி கலைப்பொருள் குழுமம் ஆகியவை நிறுவப்படும்.

பொது வசதி: திருப்பூா் மாவட்டம், கல்லிப்பாளையத்தில் ஆப்செட் பிரிண்டிங் மற்றும் புக் பைண்டிங் குழுமத்துக்கான பொது வசதி மையம் ரூ. 31.75 கோடியிலும், திருச்சி மாவட்டம், துறையூா் பெருமாபாளையத்தில் அச்சு குழுமத்துக்கான பொது வசதி மையம் ரூ. 29.93 கோடியிலும் நிறுவப்படும். 18 சிட்கோ தொழிற்பேட்டைகளின் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகள் ரூ. 40 கோடியில் மேற்கொள்ளப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ. 37.25 கோடியில் தொழிலாளா் தங்கும் விடுதி கட்டப்படும்.

இளைஞா்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், 2,000 கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவா்களுக்கு விழிப்புணா்வு மற்றும் பயிற்சிகளானது ‘நிமிா்ந்து நில்’ என்ற பெயரில் ரூ. 19 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com