ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? -ரஜினி விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது பற்றி ரஜினி விளக்கம்...
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவுநாளான இன்று, ’ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முன்னோட்டக் காட்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காணொலியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் பேசியதாவது:

”பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டு வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியிருந்தேன். அமைச்சராக இருந்த அவரை வைத்துக் கொண்டு அதுபற்றி பேசியிருக்கக் கூடாது. ஆனால், அன்றைய சூழலில் தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன். இதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டார்.

இது தெரிந்தவுடன் என்னால் இப்படி நடந்துவிட்டதே என்று எண்ணி, தூங்கக்கூட முடியவில்லை. ஆனால், அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு என்னிடம் பேசினார். எனது மனதில் இது எப்போதும் இருந்தது.

ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடன் நான் பேசுவதாக ஆர்.எம்.வீ.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார். நீங்கள் சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார். இவர்தான் ரியல் கிங் மேக்கர்.” எனத் தெரிவித்தார்.

பாட்ஷா மேடையில் ரஜினி பேசியது என்ன?

ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக படக்குழு சார்பில் வெள்ளிவிழா நடத்தப்பட்டது.

பாட்ஷா படத்தின் தயாரிப்பாளரும் அன்றைய தமிழக அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

இந்த விழாவுக்கு சில நாள்களுக்கு முன்னதாக, இயக்குநர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். தமிழகத்தில் மேலும் சில இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றிருந்தன.

இதுதொடர்பாக பேசிய ரஜினி, “தமிழகத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகமாகிவிட்டது, அரசு இதனை கவனிக்கவில்லை என்றால் விளைவுகள் ஏற்படும்” என்று ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி பேசினார்.

இதனால் கோபமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம். வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதுடன், கட்சியில் இருந்தும் ஒதுக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com