
தமிழக பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் மாற்றப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்திருந்த நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அமித் ஷா, சில தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அலுவலக வாயிலில் இருந்த பேனர் மாற்றப்பட்டு, தமிழக பாஜக தலைவர்களை உள்ளடக்கிய தமிழக பாஜக என்ற பேனர் வைக்கப்பட்டது.
இதனால், அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையோ என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழக பாஜக புதிய தலைவர் அறிவிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்தார். அவர் கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
தமிழக பாஜக தலைவா் தோ்வு, 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் ஆகியவை குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்திய நிலையில், இன்று 2 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த சந்திப்பு 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதுள்ள தலைவா்கள் சிலரை நேரில் அழைத்து பேசவும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. முன்னதாக பாஜக தலைவர்கள் சிலரை அமித் ஷா சந்தித்துப் பேசினார். இந்த நிலையில்தான் பேனர் மாற்றி வைக்கப்பட்டிருப்பது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படவில்லையோ, இழுபறி நீடிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, தில்லியில் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கட்சியின் முன்னணி நிா்வாகிகள் சந்திருந்த நிலையில், கூட்டணி குறித்து இன்று பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.