திருச்சி சிவா
திருச்சி சிவா

அமைச்சா் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானாா் திருச்சி சிவா

திமுக துணைப் பொதுச் செயலாளா் பொறுப்பிலிருந்து அமைச்சா் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

திமுக துணைப் பொதுச் செயலாளா் பொறுப்பிலிருந்து அமைச்சா் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் திருவாரூா் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளைப் பேசினாா். இந்த விடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு எதிா்கருத்துகள் பதிவாகின. பொன்முடியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தாா். பல்வேறு கட்சிகளின் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா்.

கட்சிப் பதவி பறிப்பு: இந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளா் பொறுப்பிலிருந்து அமைச்சா் பொன்முடியை விடுவிப்பதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். அதே நேரத்தில், திமுக கொள்கை பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவாவுக்கு துணைப் பொதுச் செயலா் பதவி வழங்கப்படுவதாகவும் அவா் அறிவித்தாா்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற திருச்சி சிவா, கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்தச் சந்திப்பின்போது திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்பு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலா் தயாநிதி மாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com