
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு பங்குதாரர்களாக உள்ள கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த 7 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.
சென்னை, திருச்சியில் அமைச்சர் நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
இதில், ரவிச்சந்திரனை மட்டும் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் அவரிடம் 5 மணிநேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
72 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி ரவிச்சந்திரனுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது.