
புது தில்லியில், கடந்த மாதம், கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண்ணின் உடலை அடையாளம் காண அவர் அணிந்திருந்த மூக்குத்தி உதவியிருக்கிறது.
ஒரு மாத காலமாக பெண்ணின் அடையாளம் தெரியாமல், இவர் யார், எப்படி கொலை செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அவர் அணிந்திருந்த மூக்குத்திதான் துருப்புச்சீட்டாக மாறியிருக்கிறது. இவ்வழக்கில் பெண்ணின் கணவர் அனில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 15ஆம் தேதி போர்வையால் சுற்றப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கல் மற்றும் சிமெண்ட் பலகையுடன் கட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்டிருந்தது. உடலைக் கைப்பற்றிய காவல்துறை, அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
பிறகு, அவர் அணிந்திருந்த மூக்குத்தியை எடுத்து, அது எந்தக் கடையில் விற்பனை செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அங்கு இந்த மூக்குத்தி யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற பதிவைக் கண்டுபிடித்த போது, அந்த மூக்குத்தியை தில்லியைச் சேர்ந்த சொத்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த அனில் குமார் என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருந்ததும், அவர் குருகிராமில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்ததம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், கைப்பற்றப்பட்ட பெண் சீமா சிங் (47) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. நகைக் கடையில் பதிவு செய்யப்பட்டிருந்த முகவரியை வைத்து அங்குச் சென்று அனில் குமாரிடம் விசாரணை நடத்திய போது, சீமா சிங் அவரது மனைவி என்று தெரிய வந்துள்ளது.
மனைவியிடம் பேச வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டபோது, போனை வீட்டில் வைத்துவிட்டு அவர் பிருந்தாவனம் சென்றிருப்பதாக அனில் குமார் கூறியதால், காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது காவல்துறையினர், அனில் குமார் அலுவலகத்துக்குச் சென்று சோதனை செய்ததில், அங்கு அவரது மாமியார் தொலைபேசி எண் கிடைத்தது. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதுதான், சீமாவின் சகோதரி பபிதா, மார்ச் 11ஆம் தேதி முதல் சீமா தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று கவலையை தெரிவித்துள்ளார்.
அனில் குமாரை தொடர்பு கொண்டு கேட்டால், சீமா ஜெய்ப்பூர் சென்றிருப்பதாகவும், உங்களிடம் பேச விரும்பவில்லை என்றும் கூறியிருந்ததாகக் கூறியிருக்கிறார். அவர் வீட்டுக்கு வந்ததும் பேசச் சொல்வதாகவும் அனில் குமார் உறுதியளித்திருக்கிறார்.
சற்று சந்தேகம் ஏற்பட்டாலும், அனில் குமாரின் பேச்சு தங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததாகவும் காவல்துறையிடம் சீமாவின் பெற்றோர் மற்றும் சகோதரி கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், சீமாவின் உடலை பெற்றோரும், சீமாவின் மூத்த மகனும் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். அனில் குமாரிடம் நடத்திய விசாரணயில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில், அனில் குமாரும், வீட்டின் பாதுகாவலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.