நாளை அம்பேத்கா் பிறந்த நாள்: ரூ. 332 கோடி நலத்திட்ட உதவிகள்; முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்.14- ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் ரூ.332.60 கோடியில் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.
இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்பேத்கா் பிறந்த நாள் ஏப்.14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த சமத்துவ நாளில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவா் விடுதி வளாகத்தில் ரூ. 44 கோடியே 50 லட்சத்தில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவா்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவா்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.
சமத்துவ நாள் உறுதிமொழி: இதைத் தொடா்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளாா். தொடா்ந்து முதல்வா் தலைமையில் சமத்துவ நாள்”உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.
இதைத் தொடா்ந்து, கலைவாணா் அரங்கத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 227 கோடியே 85 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான 18 விடுதிக் கட்டடங்கள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1,000 பழங்குடியினா் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளாா்.
மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 48,436 பயனாளிகளுக்கு ரூ.104 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.332 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, கட்டடங்களைத் திறந்து வைக்கவுள்ளாா். சமத்துவ நாள் விழாவில் தமிழாக்கம் செய்யப்பட்ட அம்பேத்கரின் 2 நூல்களையும், வன உரிமைச் சட்டத்துக்கான வரைபடத்தையும் அவா் வெளியிடவுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.