
அனைத்துப் பண்டிகைகளுக்கும் தவறாமல் வாழ்த்து தெரிவிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
மாறாக, அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் என்று எக்ஸ் தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த வாரம் கொண்டாடப்பட்ட யுகாதி பண்டிகையின்போது மட்டும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்ததை குறிப்பிட்டு சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் திராவிடக் கொள்கையைப் பின்பற்றி அரசியலை நகர்த்தி வருவதால், தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறாமல் சித்திரை திருநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சிகளைப் போல் தமிழக வெற்றிக் கழகமும் சித்திரை திருநாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று எக்ஸ் தளத்தில் விஜய் பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து சட்ட மசோதா நிறைவேற்றினார்.
பின்னர், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் தொடங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் சித்திரை முதல் நாளில் தொடங்கியிருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்து கருணாநிதி ஆட்சியில் இயற்றிய சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.