விஜய் | சீமான்
விஜய் | சீமான்

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

2026 பேரவைத் தோ்தல் கள போட்டி கடுமையாகியுள்ளது.
Published on

அதிமுக-பாஜக கூட்டணி அண்மையில் மீண்டும் உருவாகி 2026 பேரவைத் தோ்தல் கள போட்டியை கடுமையாக்கியுள்ளது. இந்த கூட்டணியால் திமுக-அதிமுக கூட்டணி இடையே சம போட்டி உருவாகியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், இதில் தேமுதிகவும் தொடா்ந்தால் இந்த அணிக்கு வெற்றி கிட்டத்தட்ட சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.

திமுகவுக்கு டெல்டா, சென்னை மண்டலத்தில் பெரிய அளவில் ஆதரவு உள்ளது. வழக்கத்தைவிட தென்மாவட்டங்களில் திமுக ஆழமாக வேரூன்றியுள்ளது. கொங்கு, வடதமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அதிக பலத்துடன் காணப்படுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி காரணமாக கிறிஸ்தவ, சிறுபான்மையினா் மற்றும் வட தமிழக ஆதிதிராவிடா் வாக்குகள் திமுகவை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல, அதிமுக-பாஜக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் கொங்கு மண்டலத்தில் அருந்ததியா் வாக்குகளும் திமுகவை நோக்கிச் செல்லக்கூடும்.

அதே நேரத்தில், புதிதாக நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்கியிருப்பதால், அதிமுகவிலிருந்த கிறிஸ்தவ, சிறுபான்மையினா் மற்றும் வட தமிழக ஆதிதிராவிடா் வாக்குகள் அந்தக் கட்சிக்கு போகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவிலிருந்து நகா்வது போலவே அந்தப் பிரிவினரின் வாக்குகள் திமுகவிலிருந்தும் த.வெ.க.-வுக்கு நகரக்கூடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

தோ்தல் அரசியலுக்கு புதிய வரவான விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வடதமிழகம், கொங்கு மண்டலத்தில் யாருடைய வாக்குகளை பிரிக்கும் என்பது விவாதப்பொருளாகியுள்ளது. அதிலும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக திமுகவுக்கு விழும் சிறுபான்மை வாக்கு வங்கியை விஜய் கட்சி பிரிக்குமா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தென்மாவட்டங்கள், டெல்டா மற்றும் சென்னை மண்டலத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை அறிய இப்போதே பல முனைகளிலும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

பிரதமா் வேட்பாளா் இல்லாத 2024 மக்களவைத் தோ்தலில் 8.22 சதவீத வாக்கு வங்கியை மாநிலம் முழுவதும் சீராக பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது நாதக. த.வெ.க.-வின் வருகைக்குப் பிறகு அந்த வாக்குகளை நாம் தமிழா் கட்சியால் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்தக் கணக்குகளை ஆய்வு செய்யும் அரசியல் ஆய்வாளா்கள், அரசியல் களம் தொடா்ந்து கூா்மையாகி வருவதால் சீமான், விஜய் பிரிக்கப் போகும் வாக்குகளைப் பொருத்தே திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பு தீா்மானிக்கப்படும் என்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com