
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கட்சியின் மேலிடத்துக்கு அவர் அனுப்பிய புகாரே, கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 14ஆம் தேதி, அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில், கட்சித் தலைவர் பி. ஆனந்தனின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின்கீழ், கட்சி தொடர்ந்து வளர்ச்சி மற்றும் உறுதிபெறும்.
மேலும், கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதியின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கப்படுகிறார். அவர் தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையிலும் அவர் கவனம் செலுத்துவார். அவர் கட்சிப் பணி எதிலும் தலையிட மாட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் அவருக்குப் பதிலாகக் கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வார். பகுஜன் சமாஜ் கட்சி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின்படி, பொற்கொடி இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் எனவும் அக்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொற்கொடி நீக்கம்
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு தலைவராக ஆனந்தன் தோ்வு செய்யப்பட்டாா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, தனது ஆதரவாளர்களைத் திரட்டி, மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் கட்சியின் மேலிட நிர்வாகிகளுக்கு புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் புகார் அளித்து ஒரு வாரத்துக்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பில் இருந்தே பொற்கொடி நீக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.