
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாநிலத் தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்று கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், ஆனந்தனை மாநிலத் தலைவராகவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நியமித்தார்.
இந்த நிலையில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொற்கொடியை தேசியத் தலைவர் மாயாவதி நீக்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
“பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக நிர்வாகக் குழு மறுசீரமைக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியத் தலைவர் மாயாவதி உத்தரவின்படி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தில் மட்டுமே இனி கவனம் செலுத்துவார். ஆம்ஸ்ட்ராங் வழக்கிலும் கவனம் செலுத்தவுள்ளார். இனி அவர் கட்சிப் பணிகளை தொடரமாட்டார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி, அசைக்க முடியாத ஆதரவை தொடர்ந்து வழங்கும்.
கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் மாநிலத் தலைவர் ஆனந்தன் தலைமையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.