
நமது நிருபர்
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தபோது பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி இந்த வழக்கில் புகார்தாரர்களில் ஒருவரான ஆர்.முருகன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த விவகாரம் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்க அனுமதி பெறுவதற்கான விவகாரம் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த விவகாரத்தை தமிழக ஆளுநர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு செயல்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடுகிறோம்' என்று கூறி வழக்கை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பட்டியலிட்டிருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்குரைஞர் சபரிஸ் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, "கே.டி.ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதியை ஏப்ரல் 11-ஆம் தேதி அளித்துள்ளார்' என்றனர்.
மேலும், இந்த வழக்கில் ஓரிரு தினங்களில் விசாரணை நீதிமன்றத்தில் இது தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தும் அவசியம் எழவில்லை என்று கூறி வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள்அமர்வு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.