அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நடிகா் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளா் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
மைத்ரி மூவி மேக்கா்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமாா் இசையமைத்துள்ளாா்.
இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ‘நாட்டுப்புற பாட்டு’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்...’ என்ற பாடலும் ‘விக்ரம்’ படத்தில் ‘என் ஜோடி மஞ்சக்குருவி...’ பாடலும், ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம் பெற்ற ‘இளமை இதோ இதோ...’ உள்ளிட்ட பாடல்கள் சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த பாடல்களை பயன்படுத்த தன்னிடம் முறையாக அனுமதி கேட்கவில்லை என இளையராஜா குற்றஞ்சாட்டியுள்ளாா். இதற்காக ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கா்ஸிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு அவா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.