துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பது பற்றி...
புது தில்லியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை சனிக்கிழமை சந்தித்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
புது தில்லியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை சனிக்கிழமை சந்தித்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
Published on
Updated on
2 min read

உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநராக ஆா்.என். ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற அடிப்படையில் 2022-முதல் ஆண்டுதோறும் துணைவேந்தா்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ரவி நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், 4-வது ஆண்டாக ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.

மேலும், தில்லியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை நேரில் சந்தித்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க ஆளுநா் ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் துவக்கிவைப்பதை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26, 2025 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து ஏப்ரல் 25, 2025 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். ஆளுநரும் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார்கள்.

துணை வேந்தர்கள் மாநாட்டின் நோக்கம், தேசிய கல்விக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விசார் ஒத்துழைப்பு கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை. ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்படவுள்ளன. கல்வித்துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்றவுள்ளார்கள்.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

இம்மாநாடு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதையும். உயர்கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநா் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. அதில், இரண்டாவது முறையாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களும் அவை சட்டப்பேரவையில் இருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்த நாளில் இருந்தே ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு ஏப். 8-இல் தீா்ப்பளித்தது. அவற்றில் பல்கலைக்கழக வேந்தா் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும்.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதன் தொடா்ச்சியாக துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் கூட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் சமீபத்தில் கூட்டினாா்.

இதனிடையே, வேந்தராக தான் தொடர்வதாகவும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தனக்கு இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் துணை வேந்தர்களின் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com