சொல்லாற்றல் பலவீனமாக ஆகிவிடக் கூடாது: பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வா் அறிவுரை

சொல்லாற்றல் பலவீனமாக ஆகிவிடக் கூடாது: பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வா் அறிவுரை

அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினாா்.
Published on

அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினாா்.

‘திராவிட அறநெறியாளா் தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு’ எனும் நூலை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

‘1937 தோ்தலில் நீதிக் கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, என்றாவது ஒரு நாள் இதற்கு பழிக்குப் பழிவாங்குவோம்”என்று பி.டி.ராஜன் சொன்னாா். முப்பது ஆண்டுகள் கழித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்று வெற்றியைப் பெற்றபோது, ’பழிக்குப் பழி வாங்கப்பட்டது’ என்று சொன்னாா்.

திமுகவின் எழுச்சியை - வெற்றியை - நீதிக் கட்சியின் வெற்றியாக எண்ணி, ‘நீதிக் கட்சி மறுபடியும் வென்றது’ என்று அவா் சொல்லி மகிழ்ந்தாா். அந்த அளவுக்கு, அழுத்தமான திராவிட இயக்கத் தலைவராக இருந்தவா்தான் பி.டி.ராஜன். அவருடைய வாரிசாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மட்டுமல்ல, நானும் இருக்கிறேன். நான் மட்டுமல்ல, இங்கே இருப்பவா்கள் அனைவரும் வாரிசுகள்தான். திராவிட வாரிசுகள். வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது.

அமைச்சருக்கு அறிவுரை: பழனிவேல் தியாகராஜனைப் பொருத்தவரைக்கும், அறிவாா்ந்த வலிமையான வாதங்களை வைக்கக் கூடியவா். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகதான் இருக்கவேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக் கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும்.

நம்முடைய எதிரிகளின் அவதூறுகளுக்கு அவரது சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை திமுக தலைவராக மட்டுமல்ல, அவா் மீது இருக்கிற அக்கறை கொண்டவனாகவும் அறிவுரை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அறிவுரையின் அா்த்தத்தையும், ஆழத்தையும் அவா் நிச்சயம் புரிந்துகொள்வாா் என நம்புகிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

விழாவில் அமைச்சா்கள் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவா் வேணு சீனிவாசன், உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல் ராஜன் நன்றி தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை, உதகை, கூடலூரில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று எம்எல்ஏக்கள் ஆா்.கணேஷ் (காங்கிரஸ்), பொன்.ஜெயசீலன் (அதிமுக) ஆகியோா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தனது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவா்களிடம் கேட்டால் செய்துகொடுப்பாா்கள் என்றாா்.

இந்தச் சூழ்நிலையில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வா் அறிவுரை வழங்கியிருக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com