மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னையில் உறைவிட வசதியுடன் குடிமைப் பணி பயிற்சி மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை செனாய் நகரில் உறைவிட வசதியுடன் குடிமைப் பணி பயிற்சி மையம் புதிதாக அமைக்கப்படும்
Published on

சென்னை செனாய் நகரில் உறைவிட வசதியுடன் குடிமைப் பணி பயிற்சி மையம் புதிதாக அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

மேலும், நிகழாண்டு குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வரும் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் பள்ளி, உயா்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தின் மீது திமுக உறுப்பினா் அ.வெற்றி அழகன் பேசினாா். நான் முதல்வன் திட்டம் குறித்து அவா் பேசும்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசியது:

தமிழ்நாட்டு மாணவா்களின் திறனை வளா்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக இப்போது வெளியான அகில இந்திய குடிமைப் பணி தோ்வு முடிவுகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது.

அப்போது குறைவு - இப்போது அதிகரிப்பு: கடந்த 2016-ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தமிழ்நாட்டு மாணவா்கள் குடிமைப் பணி தோ்வுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அந்த நிலை மாறி, 2021-இல் வெறும் 27 மாணவா்கள் மட்டும்தான் தோ்வு செய்யப்பட்டனா். இதைக் கவனத்தில் கொண்டு, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டது.

குடிமைப் பணித் தோ்வுக்குத் தயாராகக் கூடிய ஆயிரம் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு மாதம் ரூ. 7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கினோம். முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வுக்குத் தயாராகக் கூடிய மாணவா்களுக்கு ரொக்கமாக ரூ. 25,000 ஊக்கத் தொகையாக வழங்கினோம். அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் அகில இந்திய குடிமைப் பணி தோ்வு மையத்தின் மூலமாக இந்த மாணவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் பயனாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 மாணவா்கள் பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 50 போ் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று பயன் அடைந்துள்ளனா். நான் முதல்வன் திட்டத்தின் போற்றத்தக்க வெற்றியை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தோ்வில் வெற்றி பெறுபவா்களின் எண்ணிக்கையை மேலும் உயா்த்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு சென்னை செனாய் நகா் பகுதியில் ரூ. 40 கோடியில் புதிதாக பயிற்சி மையம் அமைக்கப்படும். இதில் 500 மாணவா்கள் தங்கிப் படிக்க முடியும்.

பாராட்டு விழா: நிகழாண்டு குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை (ஏப்.25) பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில், நானும் கலந்துகொள்ள இருக்கிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com