அதென்ன அக்னி நட்சத்திரம்.. எப்போது தொடங்குகிறது?
தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெய்யில் என்கிற அக்னி நட்சத்திரம் இந்தாண்டு எப்போது தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
கோடைக்காலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அக்னி நட்சத்திரம். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். உண்மையில் இந்த அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அக்னி என்பது வெப்பத்தைக் குறிக்கிறது. ஆனால் இதை அக்னி நட்சத்திரம் என ஏன் சொல்கிறோம். அஸ்வினி தொடங்கி ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி என்று ஒரு நட்சத்திரமே கிடையாது. அப்படியானால் அக்னி நட்சத்திரம் என ஏன் அழைக்கிறோம்.
இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது.
இதைத் தவிர அறிவியல் ரீதியாக பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திர காலத்தில் முதல், கடைசி ஏழு நாள்கள் வெயிலின் தாக்கம் சுமாராகவும், இடையில் ஏழு நாள்கள் வெய்யில் அதிகமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெய்யில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கும். அதிலும் கத்தரி வெய்யில் என்னும் அக்னி நட்சத்திரம் நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போன்று வெய்யில் பிளந்து எடுக்கும்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிப்ரவரி முதலே வெய்யில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில இடங்களில் வெய்யில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதலாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நம்மைக் குளிர்விக்கக் கோடை மழை அவ்வப்போது மெல்ல தலைகாட்டிச் சென்றாலும், அடுத்த நாளே வழக்கம்போல் வெய்யில் கொளுத்தத் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தாண்டின் கத்தரி வெய்யில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கில நாள்களின்படி கிட்டத்தட்ட மே மாதம் முழுவதுமே இந்தாண்டு கத்தரி வெய்யில் கொளுத்தப்போகிறது.
கோடை வெப்பத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அதிகப்படியான தண்ணீர் அருந்துவதும், உடல் அதிக சூடு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள்.
முக்கியமாக அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.