துணைவேந்தர் மாநாடு அரசுக்கும் துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும்! - திருமாவளவன்

துணைவேந்தர் மாநாடு அரசுக்கும் துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
திருமாவளவன்(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

திருச்சி: தமிழ்நாடு ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசுக்கும் துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும் விதமாகவே உள்ளது என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசுகையில், “சாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பகை வளர்த்து ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.அதுதான் கசப்பான உண்மை.

மத நல்லிணக்கம் தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தேவை என்பதை சங்பரிவார்கள் இந்த சூழலிலாதாவது புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவதில் எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயம் இல்லை. ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே.

370 ஆவது சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு-காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக அரசு திரும்பத் திரும்ப கூறி வந்தது. அங்கு அச்சமின்றி சுற்றுலா செல்லலாம் என்கிற அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டது. அதனை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்றபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகி முன்மாதிரியாக விளங்கினார்.

அமித்ஷா பதவி விலக வேண்டும்

இந்த நிலையில் தான் அமித்ஷா பதவி விலக வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்துகிறோம். விசிக சார்பில் வக்ஃபு சட்டத்தை கண்டித்து வரும் மே 31 ஆம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அவர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருவதாக உணரப்பட்டது.

துணைவேந்தர்களுக்கும் நெருக்கடி உருவாகியது. அந்த நெருக்கடியை ஆளுநர் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார். இன்று துணைவேந்தர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள். ஆளுநர் ஆர். என். ரவியின் இதுபோன்ற செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்றார்.

யுத்தம் தேவையில்லாதது

மேலும், காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருநாட்டிற்கும் போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக்கூடாது. நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது. அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியப் படுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது.

சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்

இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் நாட்டில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை. மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது காஷ்மீரில் தற்போது நடந்துள்ள தாக்குதல் தெளிவுபடுத்தி உள்ளது.

சாதி, மதம் பார்க்க மாட்டார்கள்

காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தை பார்த்து நடந்த தாக்குதல் போல் தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த வித கற்பிதம் தேவையில்லை” என திருமாவளவன் கூறினார்.

இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com