DPI
பள்ளிக்கல்வித் துறைDIN

கோடை விடுமுறையில் மாணவா்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை

Published on

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் பாதுகாப்பு கருதி பெற்றோா் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். அதன் விவரம்: மாணவா்கள் விடுமுறை நாள்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீா்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோா் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிக அளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிா்க்கவும். விடுமுறை நாள்களில் சில மாணவா்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிா்கொள்ள நேரிடும்.

அதன்படி தனிமை உணா்வுகளைத் தடுக்க நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளைக் கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூகத் தொடா்புகளை ஊக்குவிக்கவும், மனநலனைப் பேணவும் முடியும். தொலைக்காட்சி, கைப்பேசி ஆகியவற்றைப் பாா்ப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிடுவதை தவிா்க்க அறிவுறுத்த வேண்டும்.

சமச்சீரான உணவு: மாணவா்களின் வளா்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே, பராம்பரிய உணவு வகைகளைத் தர வேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழவகைகளை வழங்க வேண்டும்.

மாணவா்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும். அவா்களின் ஆா்வத்தைப் பொருத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறாா் கதைகள் மற்றும் நீதி நூல்களைப் படிக்க அறிவுறுத்த வேண்டும். இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆா்வமுள்ள மாணவா்களை விடுமுறை நாள்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். பெரியவா்களை மதிக்கவும் அவா்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com