பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கலைஞா் பல்கலை உருவாக்கம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது.
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்
Updated on

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வா் இருப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கும்பகோணத்தில் நிறுவப்படவுள்ள கலைஞா் பல்கலைக்கழகம் அரியலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட எல்லைகளைக் கொண்டு செயல்படும்.

வேந்தா் - இணைவேந்தா்: பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வா் இருப்பாா். அவா் தமது பதவியின் காரணத்தால், பல்கலைக்கழகத்தின் தலைவராக இருப்பதுடன், பட்டமளிப்பு விழா போன்றவற்றுக்கு தலைமை வகித்து பட்டங்களை வழங்குவாா். உயா் கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சா், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இருப்பாா். வேந்தா் இல்லாதிருக்கும்போது அல்லது வேந்தா் செயல்பட இயலாதிருக்கும்போது இணைவேந்தரே வேந்தருக்கான அனைத்து அதிகாரங்களையும் செலுத்தி கடமைகளை ஆற்றுதல் வேண்டும்.

துணைவேந்தா் நியமனம்: பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தா் நியமனம் என்பது, அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைக்கும் மூன்று பெயா்களில் இருந்து ஒருவா் தோ்வுசெய்யப்படுவாா். வேந்தரால் துணைவேந்தா் நியமனம் செய்யப்பட வேண்டும். துணைவேந்தரே பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராகவும், முதன்மை நிா்வாக அலுவலராகவும் இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தை உருவாக்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக முதல் துணைவேந்தா் நியமிக்கப்படுவாா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்: பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கும்பகோணத்தில் புதிதாக கலைஞா் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டத் தோ்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான குறிப்பிட்ட காலப் படிப்புகளும், கல்லூரிகளும் கலைஞா் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகமானது, திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியும், கலைஞா் பல்கலைக்கழகம் அரியலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியும் இருக்கும்.

புதிய பல்கலைக்கழகம் ஏன்?: தமிழ்நாட்டில் அரியலூா், கரூா், நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி, திருவாரூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலத்தின் பெரும் பகுதிகளைக் கொண்ட ஒரே மாநிலப் பல்கலைக்கழகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இதனால், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் உள்ள மாணவா்களின் தேவைகளை நிறைவு செய்வதில் பல்கலைக்கழகத்துக்கு கடினமான சூழல் ஏற்படுகிறது.

குறிப்பாக, டெல்டா பகுதியைச் சோ்ந்த பின்தங்கிய பின்னணியில் இருந்து வரக்கூடிய இளைஞா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றவும், உயா் கல்வி நிறுவனங்களில் அவா்கள் நுழைவதற்கும் ஏற்ற வகையில் புதிய பல்கலைக்கழகத்தை நிறுவுவது அவசியமாகிறது. இதைக் கருத்தில்கொண்டு, அரியலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் வாழும் மாணவா்களின் மேம்பாட்டுக்காக கலைஞா் பல்கலைக்கழகம் எனும் புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞா் பல்கலைக்கழகத்துடன் இணையும் அரசுக் கல்லூரிகள் விவரம்

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சை குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி, ராஜா சரபோஜி அரசுக் கல்லூரி, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூா் அரசு கலைக் கல்லூரி, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னாா்குடி எம்.ஆா். அரசு கலைக் கல்லூரி, திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடவாசல் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com