பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? ஆர்.எஸ்.பாரதி

பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா என ஆர்.எஸ்.பாரதி கேள்வி
 திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி(கோப்புப்படம்)
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை: குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’’ எனச் சொல்லியிருந்தார்.

இதற்கு பதிலளித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படைக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த… கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா? 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் எனத் தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ‘ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’ என ஜோசியம் சொல்கிறார்! அ.தி.மு.க.வைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?

எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்.எல்.ஏ. பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி தி.மு.க அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com