வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
Published on
Updated on
1 min read

சென்னை: வங்க மொழியை வங்கதேச மொழி என தில்லி காவல்துறை குறிப்பிட்டிருந்ததற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தில்லி காவல்துறை எழுதிய கடிதம் ஒன்றில், வங்க மொழியை, வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். இது வங்க மொழியைப் பேசும் மக்களை அவமதிக்கும் செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவை மேற்கோள்காட்டி, தில்லி காவல்துறையின் கடிதத்தைக் கண்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை, வங்க மொழியை "வங்காள மொழி" என்று குறிப்பிட்டிருக்கிறது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி. இதனை தில்லி காவல்துறை அவமரியாதை செய்திருக்கிறது.

இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அடையாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் மோசமான மனநிலையைத்தான் காட்டுகிறது.

இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மேற்கு வங்க மொழிக்கும் மாநில மக்களுக்கும் நிச்சயம் ஒரு கேடயமாக நிற்பார். இதற்கு ஏற்ற பதிலடியைக் கொடுக்காமல், இந்த விவகாரத்தை அவர் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல விடமாட்டார் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதத்தைப் பகிர்ந்திருக்கிறார். அந்தக் கடிதம், தில்லி காவல்துறையால் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில், வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்டுள்ளது காவல்துறை. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்று கேட்டு, காவல்துறை மேற்கு வங்க அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமான வங்கா பவனுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

தில்லி காவல்துறை, வங்க மொழியை, வங்கதேச மொழி என்று குறிப்பிடுகிறது. இது எவ்வளவு பெரிய தவறு. வங்க மொழி நமது தாய்மொழி. ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் பேசிய மொழி. நமது தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் எழுதப்பட்ட மொழி என்று கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், இது அரசியல் ஆதாயத்துக்காக மமதா பானர்ஜி செய்யும் வேலை என்று பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், சட்டவிரோதமாக, வங்கதேசத்தவர்கள், நாட்டுக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். மொழி மற்றும் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்றும் பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com