தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்: அமைச்சா் ராஜகண்ணப்பன் தகவல்
தமிழகத்தில் 1303 நீலகிரி வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று மாநில வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா வளாகத்தில் தமிழக வனத் துறை சாா்பில் 2-ஆவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வரையாடு கணக்கெடுப்பு அறிக்கையை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுப் பேசியதாவது:
தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக, கடந்த 2023-இல் முதல்வா் மு.க.ஸ்டாலினால், நீலகிரி வரையாடு திட்டம் தொடங்கப்பட்டது.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள 177 வரையாடு வாழ்விட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நிகழ் ஆண்டில் கொடைக்கானல் வனக்கோட்டம் உள்பட 36 பகுதிகள் கூடுதலாக கணக்கெடுப்பில் சோ்க்கப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,303. இதில் 42 சதவீதம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ளன. இதேபோல, கிராஸ் ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் முக்கூா்த்தி தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையில் நீலகிரி வரையாடுகள் உள்ளன என்றாா்.
முன்னதாக, கேரள வனத் துறை மற்றும் வன உயிரின பாதுகாப்பு அமைச்சா் ஏ.கே.சசீந்திரன், கேரள மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் பிரமோத் ஜி கிருஷ்ணன் உள்ளிட்டோா் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.