
கார் விபத்து தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மே 2 ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது.
மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், இணையக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னை துன்புறுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மத நல்லிணக்கத்துக்கு எதிராக தேவையில்லாத கருத்துகளை ஆதீனம் பேசியுள்ளார் என்று காவல்துறை தரப்பு வாதம் செய்தது.
வாதத்தின் முடிவில் மதுரை ஆதீனம் மீதான மனுவில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.