
தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இல்லாத 24 மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் உயா்தர மருத்துவ சேவைகளை வழங்கிட புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி உள்ளிட்ட 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயா்த்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
தாம்பரம் அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே ரூ.115.38 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது ரூ.5.38 கோடியில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 2,27,320 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையில் 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகள்,40 ஐசியூ படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இதற்கிடையே, குரோம்பேட்டையில் இருந்த பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.7.10 கோடியில் பல் மருத்துவமனையும், ரூ.1 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 3 மருத்துவக் கட்டடங்களையும் ஆக.9-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கவுள்ளாா்.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் வேலு, ”முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.