
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரன் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அபாரதம் விதித்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அமலாக்கத் துறை அதிகாரிகள், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இதை எதிர்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமர்வில், ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய நாராயணன், மேல் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த பின்னர், அமலாக்கத் துறை தீர்ப்பாய அதிகாரி, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை, உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனவே, இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் என்.ரமேஷ், உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தடை விதித்தது. ஆனால், மனுதாரரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை, அதற்கு முன்பே தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தீர்ப்பாயத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துவிட்டனர். அந்தப் பொருள்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் அல்லது மனுதாரரிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து தீா்ப்பாயம் முடிவு செய்யும். இதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே எடுத்த நடவடிக்கை. இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒவ்வொரு முறையும் அமலாக்கத் துறை இதுபோல் செயல்பட்டதால்தான் இடைக்கால உத்தரவு பிறப்பித்தோம். அப்போது, நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் உள்பட அனைவரும் ஆஜராகி இருந்தனர். அதன்பிறகும், நோட்டீஸ் அனுப்பியதை ஏற்க முடியாது. உயா்நீதிமன்ற உத்தரவை மீறி அமலாக்கத் துறை செயல்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
எனவே, மனுதாரா் விரும்பினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம். ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத் துறைக்கு எதிராக தொடா்ந்த பிரதான வழக்கின் விசாரணையை ஆக. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமர்வில் இன்று(ஆக. 6) விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில், ஒருங்கிணைந்த பதில் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் ஒருமுறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, நீதிபதிகள், முன்னதாக 2 முறை அவகாசம் அளித்த பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று தெரிவித்து, ஒரு மனுவுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்தத் தொகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டு விசாரணையை ஆக. 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.