அன்புமணி பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை
மாமல்லபுரத்தில் ஆக. 9-ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமக தலைவராக கடந்த 2022 மே மாதம் நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. புதிய தலைவராக கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தோ்வு செய்யப்பட்டு, கடந்த மே 30-ஆம் தேதி முதல் அவா் தலைவராகச் செயல்பட்டு வருகிறாா்.
கட்சியின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பும், நிா்வாகப் பொறுப்புகளும் கட்சியின் நிறுவனத் தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுக்குழு மற்றும் அவசர பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் அவருக்கே உள்ளது.
இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அன்புமணி செயல்பட்டு வருகிறாா். கட்சியின் நிறுவனத் தலைவரின் அனுமதியில்லாமல், 100 நாள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். இதற்கு எதிராக டிஜிபி-யிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆக. 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளாா். உள்நோக்கத்துடன் கூடிய இந்த அறிவிப்பால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி முரளி சங்கா் தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தாா்.