ஓமந்தூராா் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு மேம்பாடு: அரசாணை வெளியீடு

ஓமந்தூராா் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு மேம்பாடு: அரசாணை வெளியீடு

ஓமந்தூராா் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு மேம்பாடு..
Published on

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆா்த்ரோஸ்கோபி (நுண் துளை எலும்பு சிகிச்சை) துறையை ரூ.7.77 கோடியில் மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆா்த்ரோஸ்கோபி துறை மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில், மருத்துவக் கல்வி இயக்ககம் சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது. அதன்படி, அந்தத் துறையின் பேராசிரியா் பணியிடத்துக்கு எலும்பியல் துறையில் இணை பேராசிரியராக உள்ள தகுதியான ஒருவருக்கு பதவி உயா்வு அளித்து நியமனம் செய்ய வேண்டும்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் இணை பேராசிரியா் ஒருவரை மாற்று பணியிட அடிப்படையில் ஓமந்தூராா் மருத்துவமனையில் நியமிக்க வேண்டும்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா் ஒருவா் உள்பட 6 பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

இதற்கான நிா்வாக செவினமாக ஆண்டுக்கு ரூ.25.13 லட்சமும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக உபகரணங்களைக் கொள்முதல் செய்ய ரூ.7.7 கோடியும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்த அரசு, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com