ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா! ஆக.15க்குள் பெறுவது எப்படி? முழு விவரம்

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா முறை ஆக.15க்குள் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில் அது பற்றி முழு விவரம்
ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா
ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா
Published on
Updated on
2 min read

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிக் கட்டணங்களை செலுத்த கொண்டு வரப்பட்ட ஃபாஸ்டேக் முறையில் ஆக.15 முதல் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச் சாலைகளை அதிகம் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ள முறையில் ரூ.3,000 செலுத்தி ஆண்டு சந்தா பெறலாம். இந்த ஆண்டு சந்தாவின் மூலம் 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கலாம். பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் ஓராண்டு வரை மட்டுமே இந்த ஆண்டு சந்தாவைப் பயன்படுத்த முடியும்.

ஒவ்வொரு முறையும் பயணம் மேற்கொள்ளும்போது ஃபாஸ்டேக் கணக்கில் பணமிருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளிலிருந்து இது பாதுகாக்கும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஃபாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்டது.

அதாவது,வாகனங்களின் முன் கண்ணாடியில் ஃபாஸ்டேக் கணக்கின் ஸ்டிக்கர் ஒட்டப்படும். சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களில் இருக்கும் இந்த ஸ்டிக்கர் எண்ம முறையில் ரீட் செய்யப்பட்டு, அந்த கணக்கிலிருந்து நேரடியாக பணப்பரிமாற்றம் நிகழ்ந்துவிடும். இதனால், சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் வெகுவாகக் குறைந்தது.

பிறகு, இது பிப்ரவரி 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான், அதிக முறை தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்காக ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டம், மத்திய நெடுஞ்சாலைத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு சந்தா - முழு விவரம்

ஏற்கனவே இருக்கும் ஃபாஸ்டேக் மூலமாகவே ஆண்டு சந்தா பெறலாம். புதிய டேக் வாங்க வேண்டியதில்லை.

புதிய ஆண்டு சந்தா, ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் ஃபாஸ்டேக் கணக்குடன் இணைக்கப்படும்.

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா கட்டணம் ரூ. 3,000/-

ஆகஸ்ட் 15 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

சந்தா செலுத்திய தேதியிலிருந்து ஓராண்டு அல்லது முதல் 200 பயணங்கள், இந்த சந்தா மூலம் மேற்கொள்ளலாம்.

ஓராண்டுக்கு காலத்துக்கு முன்னதாக 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடந்துவிட்டால் மீண்டும் பணம் செலுத்த நேரிடும்.

மாநில நெடுஞ்சாலை, உள்ளூர் சுங்கக் கட்டணங்களுக்கு இது பொருந்தாது.

எப்படி வாங்குவது?

  • ஆன்லைன் மூலமாகவே ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா செலுத்தலாம்.

  • ராஜ்மார்க் யாத்ரா செயலி, என்எச்ஏஐ அல்லது எம்ஓஆர்டிஎச் வலைதளங்களில் ஆண்டு சந்தா செலுத்தும் வசதி உள்ளது.

  • பயனர் தங்களது பதிவு செய்த செல்போன் எண் அல்லது வாகன பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் அடையாள எண்ணைப் பதிவு செய்து உள் நுழையலாம்.

  • உடனடியாக, ஒருவர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா? ஃபாஸ்டே்க் எண் சரியான வாகன பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஃபாஸ்டேக் கருப்புப் பட்டியலுக்கு மாற்றப்படாமல் உள்ளதா என அனைத்தும் ஆராயப்படும்.

  • தகுதியுடைய ஃபாஸ்டேக் கணக்காக இருந்தால், பணம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.

  • யுபிஐ, கிரெடிட்/டெபிட் அட்டை அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தலாம்.

  • பணம் செலுத்தப்பட்டதும், ஏற்கனவே இருக்கும் ஃபாஸ்டேக் கணக்குடன் ஆண்டு சந்தா இணைந்துவிடும்.

  • இது குறித்து உறுதி செய்யப்படும் எஸ்எம்எஸ் அனுப்பிவைக்கப்படும்.
  • எப்போது வேண்டுமானாலும் இந்த சந்தாவை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆக.15 அன்றுதான் செயல்பாட்டுக்கு வரும்.

ஓராண்டுக்கு முன்பே, 200 முறை பயன்படுத்திவிட்டால்?

ஃபாஸ்டேக் மூலம் 200 முறை சுங்கச் சாவடிகளைப் பயன்படுத்தியிருப்பது குறித்து தகவல் வரும். அதன்பிறகு, ஒவ்வொரு முறையும் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் அனுப்பிய பிறகே பயணிக்க வேண்டும். விரும்பினால் மீண்டும் ஆண்டு சந்தா செலுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com