
சென்னை: பாமக பொதுக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வழக்கில், ராமதாஸ், அன்புமணி இருவரும் அறைக்கு நேரில் வருமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தது ஏன் என்பது குறித்து அன்புமணி வழக்குரைஞர் பாலு விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆக. 9ஆம் தேதி பாமக பொதுக்குழுவுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு அழைத்து வர முடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வழக்கை என்னால் 5 நிமிடத்தில் முடிக்க முடியும் என்றாலும், கட்சி மற்றும் இருவரின் நலன் கருதி தன்னுடைய அறையில் ஆஜராகும்படி கோரிக்கை வைத்ததாக நீதிபதி குறிப்பிட்டதாக அன்புமணி தரப்பு வழக்குரைஞர் பாலு கூறியுள்ளார்.
மேலும், நீதிபதி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அன்புமணி இன்று மாலை நீதிமன்றம் வருகிறார் என்று பாலு சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமதாஸ் - அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர அழைப்பு விடுத்திருக்கிறார்.
மனுவில் கூறப்பட்டிருப்பது என்ன?
பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. புதிய தலைவராக கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தோ்வு செய்யப்பட்டு, கடந்த மே 30-ஆம் தேதி முதல் அவா் தலைவராகச் செயல்பட்டு வருகிறாா்.
கட்சியின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பும், நிா்வாகப் பொறுப்புகளும் கட்சியின் நிறுவனத் தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுக்குழு மற்றும் அவசர பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் அவருக்கே உள்ளது.
ஆனால், ஆக. 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளாா். அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் வழக்குரைஞர்கள் இன்றி, இன்று மாலை தனது அறைக்கு வர நீதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.