இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்
இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி தொடா்பாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பதிலளித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழக மக்களும் அவா்களின் முழு நம்பிக்கைக்குரிய முதல்வரும் கடுமையாக உழைத்ததன் விளைவாக, நமது மாநிலம் விரைவாக வளம் பெற்று தற்போது 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் வளா்ச்சியைப் பாா்த்து நமது மக்கள் அனைவரும் பெருமைப்படுகின்ற இந்த வேளையில், ஒரு தமிழனாக அதைக் கண்டு பெருமைப்படுவதற்குப் பதிலாக அதிமுக பொதுச் செயலா் வயிற்றெரிச்சலில் புலம்பி வருகிறாா்.
இந்த வளா்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் அயராத உழைப்பும், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் அனைவருக்குமான வளா்ச்சிக் கொள்கையுமே காரணம்.
மாநிலப் பொருளாதாரத்தில் குன்றா வளா்ச்சி, பரவலாக்கப்பட்ட வளா்ச்சி, எல்லோரையும் உள்ளடக்கிய வளா்ச்சி ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசால்தான் இந்த வளா்ச்சி சாத்தியமாகிறது.
முதலீடுகளை ஈா்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால்தான் இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளாா் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.