
சென்னை: திமுக ஆட்சி கடந்த 2021-ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 17.74 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை பல்லாவாரத்தில், ஏழை, எளிய மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 205.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் 41,858 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின், இன்றையதினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாநகர் சூழ் பகுதி மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பு வரன்முறைத் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 1672.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பட்டாக்களை 20,021 பயனாளிகளுக்கு வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 21.2.2025 மற்றும் 26.4.2025 நாளிட்ட அரசாணையின்படி 9321 பட்டாக்கள், அனகாபுத்தூர் மற்றும் மதுராந்தகம் நகர நிலவரித் திட்டத்தில் 5461 பட்டாக்கள், நில நிர்வாக ஆணையர் அவர்களின் 23.6.2025 ஆம் நாளிட்ட சுற்றறிக்கையின்படி இணையவழியில் 2764 பட்டாக்கள், நில நிர்வாக ஆணையர் அவர்களின் 20.9.2018-ஆம் நாளிட்ட கடிதத்தின்படி சர்கார்/நஞ்சை/புஞ்சை/மனை-ரயத்து மனையாக மாற்றம் செய்யப்பட்ட 353 பட்டாக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 2122 பட்டாக்கள், என மொத்தம் 20,021 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், குமரியில் இருந்து சென்னை வரை பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், நாட்டில், 11.19 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நாட்டின் வளர்ச்சியில் நாம் தான் மிஞ்சி இருக்கிறோம். இதுதான் ஸ்டாலின் ஆட்சி.
திமுக ஆட்சி, 2021-ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 17.74 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கியுள்ளம். பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2011 - 21 வரை பின்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறோம். கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்றார்.
முன்னதாக, தாம்பரத்தில் ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.