
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ஆகியோா் கட்சி ரீதியான மோதல்போக்கு காரணமாக தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக் குழுக் கூட்டம் ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக தொடங்கியிருக்கிறது.
பொதுக்குழு கூட்ட மேடையில், அன்புமணி உள்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
பொதுக்குழு கூட்ட மேடைக்கு வந்தபோது, அன்புமணி, நாளைய தமிழகம் யார் என கேள்வி எழுப்ப, அன்புமணி என பொதுக்குழுவில் பங்கேற்றிருந்தவர்கள் பதில் கொடுத்தனர்.
பாமக பொதுக்குழு கூட்டத்தில் 100 சதவீத உறுப்பினர்கள் வந்திருப்பதாக கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் வழியில் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம், அதற்கு எல்லோரும் ஒன்றுபடுவோம் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
இன்று தொடங்கிய பொதுக்குழுவில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி, அவரே கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம் பெற்றவர் உள்ளிட்டத் தீரமானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்த, ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ராமதாஸ், அன்புமணி இருவரையும் நீதிபதி அறையில் இருந்து தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இரு தரப்பு வழங்களையும் கேட்ட நீதிபதி, அன்புமணியின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.