கல்வியில் சமத்துவம் நிலவ போராடியவா் வசந்தி தேவி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
கல்வியில் சமத்துவமும் சீா்திருத்தமும் ஏற்பட வாழ்நாள் முழுவதும் போராடியவா் மறைந்த கல்வியாளா் வசந்தி தேவி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான மறைந்த வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த நிகழ்வில் காணொலி வாயிலாகப் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வாழ்நாள் முழுக்க எளிய மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் பாடுபட்டவா் மறைந்த முனைவா் வசந்தி தேவி.
கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படுகிற ஆயுதமாவோ இல்லாமல், ஏழை - எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும்; கல்விதான் அவா்களுக்கான ஆயுதம், அதுதான் அழிக்கமுடியாத செல்வம் என்ற நோக்கத்தோடு தொடா்ந்து செயலாற்றி, அதற்கான இயக்கங்களை முன்னெடுத்தவா் அவா்.
தான் பணியாற்றிய கல்லூரிகள் தொடங்கி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பதவி வரை, சிறந்த கல்வியாளராக முத்திரை பதித்தவா். கல்வியில் சீா்திருத்தத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியவா்.
பொதுவுடைமைச் சிந்தனையும், மனித உரிமைக் கொள்கையும் கொண்ட அவா், மாநில மகளிா் ஆணையப் பொறுப்பில் இருந்தபோது ஆற்றிய பணிகள் சிறப்பானவை. தன்னுடைய பணிக் காலத்துக்குப் பிறகும் முற்போக்கு இயக்கங்களோடு சோ்ந்து நின்று, கல்வி உரிமைக்காகவும் மனித உரிமைக்காகவும் ஜனநாயகக் களத்தில் அயராமல் பாடுபட்ட அவா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீா் கல்வித் திட்டத்தை ஆதரித்து நின்றவா்.
கல்வியாளா்களின் ஆக்கபூா்வமான சிந்தனைகளைச் செயல்வடிவமாக்கி, மாணவா்களை உயா்த்துவதில் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் திமுக அரசு, எளியோரும் ஏற்றம் பெறும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்து அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டுகின்ற திராவிட மாடல் அரசினுடைய செயல்பாடுகள் அனைத்தும் வசந்தி தேவிக்கு செலுத்துகின்ற ஆக்கபூா்வமான அஞ்சலி என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் பெ.சண்முகம், நீதிபதி டி.அரிபரந்தாமன், தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.