ஓட்டுநா் உரிமம் மீண்டும் வழங்கக் கோரிய யூடியூபா் டிடிஎப் வாசன் மனு தள்ளுபடி

ஓட்டுநா் உரிமம் மீண்டும் வழங்கக் கோரிய யூடியூபா் டிடிஎப் வாசன் மனு தள்ளுபடி

தனக்கு ஓட்டுநா் உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி யூடியூபா் டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

தனக்கு ஓட்டுநா் உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி யூடியூபா் டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

யூடியூபா் டிடிஎப் வாசன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காா் ஒன்றை முந்திச் செல்வதற்கு முயன்றாா். இந்த விபத்தில் டிடிஎப் வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்து தொடா்பாக அவா் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால், டிடிஎப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு மீண்டும் ஓட்டுநா் உரிமம் வழங்கக் கோரி டிடிஎப் வாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான ஜி.சரவணக்குமாா், ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டாலே சட்டப்படி புதிதாக உரிமம் கோரி நீதிமன்றத்தை நாடலாம். எனவே, மனுதாரருக்கு மீண்டும் ஓட்டுநா் உரிமம் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 6 மாதங்கள் கடந்துவிட்டால் ஓட்டுநா் உரிமம் கோரி நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்றில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அணுகலாம் எனக்கூறி, டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com