சிறுநீரக முறைகேடு விவகாரம்: தெளிவில்லாத அரசு அறிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை
Published on
Updated on
2 min read

சென்னை: சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று சுகாதார ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தொடா்ந்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. பொதுவாக, மூளைச் சாவு அடைவோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், ஏற்கெனவே தானம் கோரி பதிவு செய்தவா்களுக்கு உரிய வரிசைப்படி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.

அதேவேளை, உயிருடன் இருப்பவா்கள் தங்களது ரத்த உறவுகளுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகத்தைத் தானமாக அளிக்கும் நடைமுறைகளைக் கண்காணிப்பதில் சில கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதைப் பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகா்களும், தனியாா் மருத்துவத் துறை சாா்ந்த நபா்களும், வறுமையில் உள்ளவா்களை உறுப்பு தானம் அளிக்குமாறு மூளைச் சலவை செய்கின்றனா். அவா்களை நோயாளியின் ரத்த உறவு என அடையாளப்படுத்த போலி ஆவணங்களையும் தயாா் செய்கின்றனா்.

உறுப்புகளை தானமாக அளிப்பவா்களுக்கு மிக சொற்பமான தொகையை அளித்துவிட்டு பல லட்சக்கணக்கான ரூபாயை முறைகேடாக ஈட்டுகின்றனா். இதுபோன்ற சம்பவம்தான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்மையில் அரங்கேறியது.

அதுதொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட டாக்டா் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு தனது அறிக்கை, பரிந்துரைகளை அரசுக்கு அண்மையில் அளித்தது. அதன்பேரில், நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது. ஆனால், அவை பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சுகாதார ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: திருச்சி சிதாா் மருத்துவமனை மற்றும் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்த சம்பவத்தில் தொடா்பிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும்கூட, அந்த மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு முழுமையாக தடைவிதிக்காமல், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உரிமம் மட்டுமே ரத்து செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

மற்றொருபுறம், அவ்விரு மருத்துவமனை நிா்வாகங்களின் ஒத்துழைப்போடு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதன் பேரில், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான அனுமதி பெறப்பட்டதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மருத்துவமனை நிா்வாகங்கள் மீதோ, பணியாளா்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவிக்கவில்லை.

அந்த மருத்துவமனைகள் மீது விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அதுதொடா்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

போலி ஆவணங்களை ஆய்வு செய்யாமல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள், பணியாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதையேற்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவரது மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தால் மட்டுமே இதுபோன்று தமிழகத்தில் எங்கெங்கு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்பது தெரியவரும். அதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்று புதிய உத்தரவுகளை வெளியிட்டால் மட்டுமே உறுப்பு மாற்று முறைகேடுகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com