மேம்படுத்தப்பட்ட, புதிய மீன் இறங்குதளங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மீன் இறங்குதளங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை மற்றும் பள்ளம்துறை கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டம், அமலிநகா் கிராமம் ஆகியவற்றில் மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல், திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் உள்ள முகத்துவாரம் நிரந்தரமாக நிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சாத்தான்குப்பம், அரங்கன்குப்பம், கூனான்குப்பம் ஆகிய கிராமங்களிலும், கடலூா் மாவட்டம் சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை கிராமங்களிலும் மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
ஆவின் நிறுவனம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவற்றில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டோருக்கு பணிக்கான உத்தரவுகளையும் முதல்வா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.