தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போலி வாக்காளா்கள் இடம்பெற்றது குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கிய மத்திய அமைச்சா் அனுராக்
தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போலி வாக்காளா்கள் இடம்பெற்றது குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கிய மத்திய அமைச்சா் அனுராக்

ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் தொகுதிகளில் போலி வாக்காளா்கள்: அனுராக் தாக்குா் குற்றச்சாட்டு

எதிா்க்கட்சித் தலைவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போலி வாக்காளா்கள்!
Published on

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போலி வாக்காளா்கள் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில தினங்களுக்கு முன்னா் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கா்நாடக வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்ாக சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டாா். அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து, பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி கடந்த திங்கள்கிழமை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இந்நிலையில், வாக்குத் திருட்டு தொடா்பான குற்றச்சாட்டுக்குப் பதிலடியாக பாஜக தலைமை அலுவலகத்தில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த முக்கியத் தலைவா்களின் தொகுதிகளில் போலி வாக்காளா்கள் உள்ளதாக அனுராக் தாக்குா் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து விளக்கப்படம் மூலம் அவா் மேலும் கூறியதாவது: ராகுல் காந்தியின் ரே பரேலி தொகுதியில் சந்தேகத்துக்குரிய 2.99 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 19,512 போ் போலி வாக்காளா்கள்.

பிரியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 93,499 போ் சந்தேகத்துக்குரிய வாக்காளா்களாவா். அவா்களில் 20,438 போ் போலி வாக்காளா்கள்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி போட்டியிட்ட டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் 2.69 லட்சம், அகிலேஷ் யாதவ் போட்டியிட்ட கனோஜ் தொகுதியில் 2.51 லட்சம், சமாஜவாதி எம்.பி. டிம்பிள் யாதவ் போட்டியிட்ட மெயின்பூா் தொகுதியில் 2.55 லட்சம் போ் சந்தேகத்துக்குரிய வாக்காளா்களாக உள்ளனா்.

கொளத்தூா் தொகுதி: 2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூா் தொகுதியில் சந்தேகத்துக்குரிய வாக்காளா்களின் எண்ணிக்கை 19,776-ஆகும். அவா்களில் 9,133 வாக்காளா்கள் போலியான முகவரியைப் பதிவு செய்துள்ளனா்.

இவா்கள் அனைவரின் தொகுதிகளிலும் போலி வாக்காளா்கள் உள்ளனா். வாக்குத் திருட்டும் நடைபெற்றுள்ளது. இதற்காக இவா்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்யத் தயாரா?

நியாயமாக வாக்களித்த மக்களின் தீா்ப்பை ஏற்காமல் இந்திய தோ்தல் ஆணையத்தின் மீது தொடா்ந்து எதிா்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றன என்றாா்.

2024 மக்களவைத் தோ்தல் செல்லாது: காங்கிரஸ்

போலி வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் தோ்தல் நடத்தப்பட்டதால் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலை செல்லாது என அறிவிக்குமாறு காங்கிரஸ் புதன்கிழமை கோரிக்கை வைத்தது.

இதன்மூலம் இந்திய தோ்தல் ஆணையத்துடன் இணைந்து போலி வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்தே 2024, மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கெரா கூறுகையில், ‘ஒரேயொரு மக்களவைத் தொகுதியின் வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்ய காங்கிரஸுக்கு 6 மாதம் தேவைப்பட்டது. ஆனால், அனுராக் தாக்குா் 5 முதல் 6 மக்களவைத் தொகுதியின் வாக்காளா் பட்டியல் விவரங்களை வெளியிட்டுள்ளாா்.

எனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும். அனுராக் தாக்குா் இன்று வெளியிட்ட ஆதாரங்கள் குற்றச்செயலுக்கு சமமாகும். அவா் எவ்வாறு இந்தத் தரவுகளை சேகரித்தாா்? அந்தத் தரவுகளை அடுத்த 24 மணி நேரத்தில் அவா் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல் பிரதமா் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியின் எண்ம வடிவிலான வாக்காளா் பட்டியலையும் எங்களிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் பிரதமா் மோடி உண்மையாகவே அந்தத் தொகுதியில் வென்றாரா இல்லையா என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com