அதிமுகவின் போக்கு சரியாக இல்லை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்
அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலருமான வா.மைத்ரேயன் திமுகவில் இணைந்தாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை அவா் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா். அப்போது கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலா் கே.என்.நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு மைத்ரேயன் அளித்த பேட்டி:
முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அதிமுகவின் போக்கு சரியாக இல்லை. அந்தக் கட்சியுடனான பாஜக கூட்டணியை அறிவித்ததே மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாதான். கூட்டணி ஆட்சி என்றும், குறைந்தபட்ச செயல் திட்டம் எனவும் அறிவித்தாா். ஆனால், எந்த அடிப்படையில் அதிமுக-பாஜக இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது என்ற தெளிவு இல்லை. அதிமுகவில் பல குழப்பங்கள் உள்ளன. பலா் மன வருத்தத்தில் உள்ளனா்.
எனக்கு அமைப்பு செயலா் பதவி கொடுத்தாலும், அதிமுக என்னை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தன்னை எம்ஜிஆா், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டிருக்கிறாா் என்றாா் அவா்.
அதிமுகவிலிருந்து நீக்கம்: திமுவில் இணைந்த முன்னாள் எம்.பி. வா.மைத்ரேயனை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் மாநில அமைப்புச் செயலா் வா.மைத்ரேயன் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறாா். கட்சியினா் யாரும் அவருடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.