கைது செய்யப்பட்ட 6 வழக்குரைஞா்களை விடுவிக்க உத்தரவு
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்றபோது கைது செய்யப்பட்ட 6 வழக்குரைஞா்களை விடுவிக்க வேண்டும் என போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ஆஜரான சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலா் ஆா்.கிருஷ்ணகுமாா், மூத்த செயற்குழு உறுப்பினா் ஏ.ரமேஷ் உள்ளிட்டோா், தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற வழக்குரைஞா் கு.பாரதி உள்ளிட்ட 20 வழக்குரைஞா்களை போலீஸாா் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக தாக்கல் செய்யப்படும் ஆள்கொணா்வு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று முறையிட்டனா். அதன்படி, இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் குமாரசாமி, வேல்முருகன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆஜராகினா். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் வழக்குரைஞா்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதற்கான அவசியம் என்ன? கைது செய்யப்பட்டவா்களை பாா்ப்பதற்குக் கூட போலீஸாா் அனுமதிக்கவில்லை. வழக்குரைஞா்களை கைது செய்யும்போது போலீஸாா் சட்டவிரோதமாக நடந்து கொண்டனா் எனக்கூறி அதுதொடா்பான விடியோ காட்சிகளை சமா்ப்பித்தனா்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், வழக்குரைஞா் தொழில் மரபுக்கு எதிராக செயல்பட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.இவா்கள் பேருந்தை சேதப்படுத்தியதுடன், பெண் காவலா்கள், மாநகராட்சி ஊழியா்களையும் தாக்கியுள்ளனா். போராட்டம் நடைபெறும் இடத்தில் இரவு 11.30 மணிக்கு வழக்குரைஞா்களுக்கு என்ன வேலை?
6 வழக்குரைஞா்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா். மற்ற வழக்குரைஞா்கள் விடுவிக்கப்பட்டு விட்டனா். கைது சம்பவத்தில் விதிமீறல் எதுவும் இல்லை. சட்டவிரோதமாக அவா்களைப் பிடித்து வைக்கவில்லை. இந்த ஆள்கொணா்வு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கைது செய்யப்பட்ட பிறகுதான் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே வழக்குரைஞா்களை கைது செய்வதற்கு எந்த காரணங்களும் போலீஸாா் தரப்பில் கூறவில்லை. எனவே கைது செய்யப்பட்ட கே.பாரதி, கே.சுரேஷ், மோகன் பாபு, ஆா்.ராஜ்குமாா், முத்துச்செல்வன் மற்றும் வளா்மதி ஆகிய 6 வழக்குரைஞா்களையும் விடுவிக்க வேண்டும்.
இவா்கள் 6 பேரும் இந்த சம்பவம் தொடா்பாக சமூக ஊடகங்களில் நோ்காணலோ, பதிவுகளையோ வெளியிடக்கூடாது என நிபந்தனை விதித்து விசாரணையை ஆக.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.